“எனக்கு சவுக்கடிதான்… வாங்கிக் கொள்கிறேன்!” – இந்திய அணித் தேர்வு மீது உத்தப்பா பாய்ச்சல்

2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரரும் ஐபிஎல் ஸ்டாருமான ராபின் உத்தப்பா நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

ஜியோ சினிமாவில் அவர் கூறியதாவது: “நான் இப்போது கூறப்போகும் கருத்துக்காக எனக்கு சவுக்கடிதான் கிடைக்கும். ஆனால் நான் வாங்கிக் கொள்கிறேன். மூத்த வீரர்கள் கடந்த உலகக் கோப்பை முடிந்தவுடனேயே தங்கள் டி20 கரியரை முடித்திருக்க வேண்டும். இந்த உலகக் கோப்பையில் இளம் வீரர்கள்தான் ஆடியிருக்க வேண்டும். மூத்த வீரர்கள் போக வேண்டியதுதான். இப்போதைய இளம் வீரர்கள் பயங்கரமாக ஆடுகிறார்கள். உண்மையான ஆற்றலைக் காட்டுகின்றனர்.

இதோடு ஐபிஎல் தொடரில் சீராக ஆடி வருகின்றனர். இப்போது விளையாடும் இளம் வீரர்கள் அணியில் இருக்க வேண்டும். அதாவது ஷுப்மன் கில் போன்ற வீரர்கள் இருக்க வேண்டும். எந்த ஒரு உலகக் கோப்பை அணியிலும் கில் இருக்க வேண்டும். அவரிடம் உள்ள ஆற்றல், வேட்கை, சாதிக்க வேண்டும் என்ற வெறி உண்மையில் ஆச்சரியமானது. இதற்காக அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இவர்களைப் போன்ற இளம் வீரர்கள் உயர்மட்ட உலகக் கோப்பையில் வாய்ப்பு பெறுவதுதான் நல்லது.” என்று கூறினார் ராபின் உத்தப்பா.

சீனியர் வீரர்களுக்கு இது அநேகமாக கடைசி டி20 உலகக் கோப்பையாகவே இருக்கும். அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தற்போதைய மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் கூர்ந்து நோக்கப்படும். ஏனெனில் கில், ரிங்கு சிங் போன்றவர்களை உட்கார வைத்தது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளன.

ரோகித் சர்மா 13 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 349 ரன்களை எடுத்தார். ஹர்திக் பாண்டியா இந்தத் தொடரில் சுத்த ஃபிளாப். பவுலிங்கில் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் கொடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பாண்டியா, ஜடேஜா, ரோகித் சர்மா, ஷிவம் துபே போன்றோரின் தேர்வு குறித்து விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன.

செய்தியாளர் G. பாரதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!