காவேரி கூக்குரல் மூலம் தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் நடத்திட்டம் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர்,

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (30-05-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் நடைப்பெற்று வருகின்றன.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தொடக்க விழா அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மேயர் திரு. சன் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர். அமுத வடிவு ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் இவ்விழாவில் பேசுகையில், “காவேரி கூக்குரல் சார்பாக 4,75,000 மரக்கன்றுகளை, சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு காவேரி படுகையில் நட வேண்டும் என்ற முனைப்போடு இவ்விழா தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வை சிறப்போடு செய்திருக்கிற ஈஷா மையத்திற்கு என் வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.” என கூறினார்.

மேலும் மேயர் திரு. சன் இராமநாதன் அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது “காவேரி கூக்குரல் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரக் கன்றுகள் நடுவது, விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்குவது என்று பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குழுவோடு இணைந்து தஞ்சை மாநகராட்சியின் சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஒவ்வொரு வட்டத்திலும் நட்டு, வளர்த்து மிக சிறப்பான ஒரு சூழலை தஞ்சை மாநகராட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இதே போல ஈஷா யோக மையம் தொடர்ந்து செயல்பட எங்கள் வாழ்த்துகள்” எனக் கூறினார்.

ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!