
சென்னை: கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் இருந்த விலையை விட சனிக்கிழமை தக்காளி மற்றும் பீன்ஸ் விலை குறைந்துள்ளது. அதன்படி தக்காளி கிலோ ரூ.27, பீன்ஸ் கிலோ ரூ.90 ஆகவும் குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி வருகிறது. கடந்த ஒரு மாதமாக நிலவிய கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.40 வரை உயர்ந்தது. இந்நிலையில், தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை கிலோ ரூ.27 ஆக குறைந்துள்ளது.
ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து வரும் பீன்ஸ் வரத்தும் தற்போது அதிகரித்திருப்பதால், கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ரூ.90 ஆக விலை குறைந்துள்ளது. மேலும், அவரைக்காய் ரூ.70-லிருந்து ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.10-லிருந்து ரூ.8 ஆக விலை குறைந்துள்ளது. அதேசமயம், முருங்கைக்காய் ரூ.10-லிருந்து ரூ.20 ஆகவும், பாகற்காய் ரூ.20-லிருந்து ரூ.30 ஆகவும், பச்சை மிளகாய் ரூ.55-லிருந்து ரூ.70 ஆகவும் உயர்ந்துள்ளது.
மற்ற காய்கறிகளான சின்ன வெங்காயம் ரூ.40, முள்ளங்கி ரூ.35, கேரட் ரூ.30, உருளைக்கிழக்கு ரூ.22, வெண்டைக்காய், பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.18, கத்தரிக்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.