முடிவுக்கு வந்தது மக்களவைத் தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கு

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (வியாழக்கிழமை) விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் 18-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 543 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்று நள்ளிரவுடன் தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெறப்படுகின்றன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.

அதுமட்டுமின்றி, அரசு வழக்கமான பணிகளை நாளை முதல் மேற்கொள்ளலாம். அரசு புதிய திட்டங்கள் அறிவிப்பது, நிதி உதவி அறிவிப்பது, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பணிகளையும் நாளை முதல் வழக்கம் போல் மேற்கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!