மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை நடைபெற உள்ள நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் விளையாடுகின்றன. இந்த சூழலில் இந்தியா இந்த முறை தோற்காது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வியை தழுவி இருந்தது. அதன் பின்னர் அந்த தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
“இந்திய அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் பும்ரா தரமான ஃபார்மில் உள்ளார். ஃபிட், வேகம், துல்லியம் மற்றும் உயர்மட்ட செயல்திறனை அவர் வெளிப்படுத்தி வருகிறார். எந்த அணியும் அவரது செயல்பாட்டுக்கு விடை தர முடியாத வகையில் விளையாடி வருகிறார்.
இன்னிங்ஸில் 120 பந்துகள் மட்டுமே கொண்ட போட்டியில் பும்ரா மாதிரியான வீரர்கள் வீசும் அந்த 24 பந்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றன. சவாலான மற்றும் கடினமான அமெரிக்க ஆடுகளத்தில் இந்திய அணி ஸ்திரமாக விளையாடியதை பார்க்க முடிந்தது. ஆஸி.க்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த முறை இந்தியா தோற்காது என நான் கருதுகிறேன். அவர்களை வீழ்த்த இங்கிலாந்து அணி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கயானா ஆடுகளம் வெற்றியாளரை தீர்மானிக்கும் என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்லோ விக்கெட்டாக இருந்தால் இந்தியாவுக்கே சாதகம்” என பால் காலிங்வுட் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.