மூன்றாவது முறையாக விருதுநகரை கைப்பற்றிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்…

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் நடிகர் ராதிகா, நாம் தமிழர் சார்பில் கௌஷிக் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இங்கு பதிவான 10 லட்சத்து 56 ஆயிரத்து 101 வாக்குகள் 24 சுற்றுக்களாக எண்ணப்பட்டது. முதல் 7 சுற்றுக்களில் தேமுதிக முன்னிலை பெற்றாலும் அடுத்தடுத்து சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்று இருவருக்கும் குறைந்த வாக்குகள் வித்தியாசமே காணப்பட்டதால் தொடர் இழுபறி நீடித்தது. 24 சுற்றுக்கள் முடிவில் மாணிக்கம் தாகூர் 4633 வாக்குகள் முன்னிலை பெற்றதை தொடர்ந்து தபால் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இறுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3, 85,256 வாக்குகளும்,தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா 166271 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக் 77,031 வாக்குகள் பெற்றனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர்
மாணிக்கம் தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வெற்றி சான்றிதழை மாணிக்கம் தாகூர் பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் மூன்றாவது முறையாக மாணிக்கம் தாகூர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூரின் வெற்றியை காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,
தமிழகத்தில் 40க்கு 40 தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது இந்தியா கூட்டணிக்கு மட்டுமல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் அவர் செய்த பணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் என தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு ஒவ்வொரு இடத்தையும், சூழலையும், வேட்பாளரை பொறுத்து மாறும் எனவும் வெற்றிதான் முக்கியம் அது கிடைத்துள்ளது என்றார். மீண்டும் மாணிக்கம் தாகூர் விருதுநகர் தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவருக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Leave a Reply

    error: Content is protected !!