திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி உலா

திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா இம்மாதம் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினதோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் 8-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வெள்ளை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பச்சை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் பத்தாம் நாளான வரும் 26-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 28-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் பா.விஷ்ணுசந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!