
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமதித்ததாக கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பா.ஜ.வின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் இவர்கள் இருவரும் இன்று(நவ., 3) டிரெண்ட் ஆகினர்.
கடந்த அக்., 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை நடந்தது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர். திமுக., தலைவர் ஸ்டாலின் சென்றபோது அங்கு அவரது நினைவிடத்தில் ஸ்டாலினிடம் விபூதி வழங்கினார் பூசாரி. ஆனால் அவர் அதை நெற்றியில் இடாமல் உடலில் பூசிக்கொண்டு பின் அப்படியே உதறிவிட்டு சென்றார். இதனால் தேவரை அவமதித்து விட்டதாக கூறி அவருக்கு எதிராக சமூகவலைதளங்களில் சில தினங்களுக்கு முன் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி டுவிட்டரில் இன்று(நவ., 3) மீண்டும் அவருக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #மன்னிப்புகேள்ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இதேப்போன்று பா.ஜ.வின் ஹெச்.ராஜாவிற்கு எதிராகவும், #தேவரைஅவமதித்தஎச்ராஜா என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
தேவர் நினைவிடத்தில் பா.ஜ.க, நிர்வாகிகள் அனைவரும் வணங்கி அஞ்சலி செலுத்தியபோது இவர் மட்டும் வணங்காமல் இருப்பதாக கூறி ஒரு போட்டோவை பதிவிட்டு, சமூகவலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. இதனால் அவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.