மதுரையில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
மதுரை அவனியாபுரம், பெரியார் நகர் மற்றும் கரிசல்குளம் பகுதியினர் மாட்டுத்தாவணி, பெரியார் நிலையம் உள்ளிட்ட மதுரையின் முக்கிய இடத்திற்கு செல்லக்கூடிய இணைப்புச்சாலை மதுரை மாநகராட்சி 60வது வார்டில் அமைந்துள்ளது.
இந்த சாலை 3.5 கி.மீ தூரம் தார்ச்சாலையாக கடந்த 2 வருடத்திற்கு முன்னால் போடப்பட்டது. அண்மையில் பெய்த தொடர் மழையின் போது, மண் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

இதனால், இணைப்புச் சாலை வழியாக புறவழிச்சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சுமார் 2500 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வரும் இப்பகுதியில் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருவதாலும், பள்ளி,கல்லூரிக்கு சென்று வரும் வாகனங்களும், தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்களும் குண்டும் குழியுமான இந்த சாலையில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது எனவும் 3.5 கிலோமீட்டர் உள்ள இந்த இணைப்புச் சாலை பழுதானதால், அவனியாபுரம், பெருங்குடி மற்றும் மண்டேலாநகர் வழியாக

மாற்றுப்பாதையில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை மாநகராட்சியினரும், நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து சீரமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துமணி என்பவர் கூறுகையில்:

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னால் போடப்பட்ட இந்த சாலை பலமுறை இது போன்று பழுதடைந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தற்போது புதிதாக சாலை அமைப்பதற்காக சுமார் 1.5 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும் சாலையை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும்,உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.