தமிழ்நாடுதமிழருக்கே என்று முதன்முறையாக முழங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாளான இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களில் முதல்வர் சென்னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

பிறப்பு
சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய நாயகம் (எட்டப்ப பிள்ளை) – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 1879 சூலை 27 ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.
பாரதி பட்டம்

அரண்மனையில் பணியாற்றிவந்த சின்னசாமி ஐயரின் புதல்வர் சுப்பிரமணிய பாரதிக்கு நண்பர் ஆனார். இருவரும் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தனர். நெல்லைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புலவர் வருகை தந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் சுப்பிரமணியனும் தாம் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தெரிந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.
கல்வி
சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும், இடைநிலைக் கல்வியை நெல்லையில் சி.எம்.எஸ். கல்லூரி பள்ளியில் கல்வி கற்றார். நெல்லையில் படிப்பை முடித்த சோமசுந்தர பாரதி சென்னை கிருத்துவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts ) பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905 ஆம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தூத்துக்குடியில் வழக்கறிஞராக தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913 ஆம் ஆண்டில் கலை முதுவர் (Master of Arts) பட்டம் பெற்றார்.
இந்திய விடுதலைப் போராட்டம்

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரிடம் தூத்துக்குடியில் பணிபுரிந்து காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து சொற்பொழிவு நிகழ்த்தியவர் நாவலர். நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஆனால், இராஜாஜி அரசாங்கம் 1937-ல் பள்ளிகளில் இந்தியைப் புகுத்தியபோது காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைவரானார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவருக்கு ஆசிரியர். எனவே, தனித்தமிழில் அழகிய நூல்கள் பல எழுதினார், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குப் புத்துரையும், கம்பன் திறனாய்விலும் புகழ்பெற்றவர். அறிஞர் அண்ணா கம்பன் காப்பியத்தை எரிக்க வேண்டும் என்றபோது அதை மறுதலித்து சேலத்தில் வாதாடியவர் நாவலரே. ’கம்பனிற் சிறந்த கவி தமிழில் இல்லை’ என்ற கொள்கையுடைய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சோமசுந்தர பாரதி ஆவார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944-ல் நாவலர் என்ற பட்டத்தை வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் முனைவர் சோமசுந்தர பாரதி ஒருவரே. திருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும்.
சமூகச் சீர்திருத்தப்பணி

சோமசுந்தர பாரதியார் இளமையிலேயே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாகளை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார். அப்பணியின் உச்சமாக, 1933 மே 13 ஆம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு எனத் தொடக்கப்பள்ளி ஒன்றி நிறுவினார். அதன் தொடக்கவிழாவில் வ. உ. சிதம்பரனார் சிறப்புரையாற்றினார்.
மறைவு
1959 டிசம்பர் 2 ஆம் நாள் சோமசுந்தர பாரதியார் மதுரை பசுமலையில் உள்ள தனது வீட்டில் மயக்கமுற்று விழுந்தார். டிசம்பர் 4ஆம் நாள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 7 ஆம் நாள் தந்நினைவு இழந்தார். டிசம்பர் 14ஆம் நாள் இரவு 8.40 மணிக்கு மரணமடைந்தார். டிசம்பர் 15ஆம் நாள் மாலை 6 மணிக்கு அவரது உடலுக்கு பசுமலையில் எரியூட்டப்பட்டது.
மரியாதை

அவரது 62 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை-திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் முருகன்,தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார்,மேற்கு தொகுதி செயலாளர் டேவிட் ராஜன்,ரெக்ஸ், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகுராஜா, திருப்பரங்குன்றம் பகுதி தலைவர் ஜெகநாதன், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் கரிகாலன் 96ஆவது வட்ட செயலாளர் வசந்த் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.