திருப்பரங்குன்றம், கோவிலில் கந்த சஷ்டிவிழாவின் நிறைவையொட்டி முருகப் பெருமான் சட்டத் தேரில்எழுந்தருளி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சட்டத் தேரின் வடம் பிடித்து கிரிவலப்பாதையில் சென்றனர்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 6-ந் தேதி அன்று “வேல் வாங்குதலும் ” – நேற்று7-ந் தேதி சூரசம்ஹார லீலையும் நடைபெற்றது.
திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று ( 8-ந்தேதி) காலையில்
தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத் தேர் அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் நின்றது.
இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு விசேஷ பூஜையும் சர்வ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத் தேரில் எழுந்தருளினார்.
இந்த நிலையில் காப்புக்கட்டி கடந்த 6 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் திரளாக குவிந்து இருந்து சட்டத் தேரினை வணங்கி வடம் பிடித்து இழுத்தனர் .
இதனையடுத்து தேர் நிலையில் இருந்து வலம் புறப்பட்டது. சன்னதி தெரு, கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் தேர்மெல்ல , மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது .
அவை கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
சட்ட தேரில் இருந்தபடியே முருகப் பெருமான் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரோட்டத்தில் பக்தர்கள் எழும்பிய “அரோகரா”கோஷங்கள் மலை முழுவதும் எதிரொலித்தது.
இதற்கிடையில் மேலரதவீதி, சன்னதி தெரு வழியே பக்தர்கள் வெள்ளத்தில் தேர்வலம் வந்து நிலைக்கு வந்தது அப்போது பக்தர்கள் “, கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, கந்த சஷ்டி முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழும்பி வண்ணம் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவிலுக்குள் விரதமிருந்த பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்து தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக பாவாடை தரிசனம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி மாலை நடைபெற உள்ளது.
இதில்மதுரை திருமங்கலம் வில்லாபுரம் அவனியாபுரம் சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.