சீமான் இயக்குனராக இருந்த போது இயக்கிய படமான வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் விஜயலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் .
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,, திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் விசாரணைக்கு ஆஜராக கூறி காவல்துறை சம்மன் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்., 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011ல் அளித்த புகாரை 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து, அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மனு நகல் தங்களுக்கு தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனு நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 2011 மற்றும் 2023ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, 2011ல் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.