திருப்பரங்குன்றம் மலைக்கோயில் விவகாரம்: மதுரை முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு … மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மதுரையில் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது.

இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியுடன் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றவர்கள் அங்கு அசைவ உணவு உண்டதாக படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், நாளை கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மத ரீதியான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாலும், பொது அமைதி சீர்குலையக்கூடும் எனவும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும், திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி பொதுச் செயலாளர் கலாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 12 மணி வரை 114 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 பணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு , பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!