திருமங்கலம் அருகே எய்ம்ஸ் சாலை சந்திப்பில் மீண்டும் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பு-பொதுமக்கள் மகிழ்ச்சி

லெமூரியா நியூஸ் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக காஷ்மீர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் – மதுரை செல்லக்கூடிய NH-7 நான்குவழிச்சாலையில் உள்ள கூத்தியார்குண்டு – எய்ம்ஸ் இணைப்பு சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020 அக்டோபர் மாதம் இங்கிருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தின் மீது லாரி மோதியதில் விளக்கு அமைக்கப்பட்ட பீடம் சேதமடைந்து, மின்கம்பம் கீழே விழும் நிலையில் இருந்தது.
லாரி மோதியதில் சாய்ந்த உயர்கோபுர மின்விளக்கு அப்புறப்படுத்தி நான்குவழிச் சாலை நிர்வாகத்தினர் சாலை ஓரத்தில் வைத்தனர். அந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் தற்போது சீரமைக்கப்படாமல் இரண்டு வருடத்திற்கு மேலாக கீழே கிடந்தது

இரண்டுஆண்டுகளான பின்பும் உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் பொருத்தப்படாததால் அப்பகுதி முழுவதும் இரவின் இருளில் மூழ்கியது.
கூத்தியார்குண்டு விலக்கு முதல் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கப்பலூர் சிட்கோ தொழிலாளர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி வாழ் மக்கள் அனைவருக்கும் பிராதானமாக இந்த கூத்தியார்குண்டு சாலை சந்திப்பு திகழ்ந்து வந்தது. இந்த இடத்தை கடந்து செல்லும் வாகனங்களும், பாதசாரிகளும் இரவு நேரங்களில் சாலையை கடக்க முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். அதே போல் இரவு நேரங்களில் இந்த இடத்தில் உள்ள இருளின் காரணமாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், கப்பலூர் டோல்கேட் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கூத்தியார் குண்டு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கை மீண்டும் அமைத்திட வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி லெமூரியா செய்தி வெளியிட்டிருந்தது.


இதையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் கூத்தியார்குண்டு சாலை சந்திப்பில் தொடர் பணிகளை மேற்கொண்டு நேற்றைய தினம் மாலை அவ்விடத்தில் உயர் கோபுர மின்விளக்கு (ஹை மாஸ் லைட்) அமைத்தனர். இதையடுத்து நேற்று இரவு முதல் கூத்தியார்குண்டு சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு பிரகாசித்து எரிய ஆரம்பித்தது.இதனால் அப்பகுதி முழுவதும் ஒளிவெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெமூரியா நியூஸ் வெளியிட்ட செய்தி காரணமாக கூத்தியார்குண்டு எய்ம்ஸ் இணைப்பு சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டதற்கு கூத்தியார்குண்டு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகத்திற்கும்,மும்பை மின்துறையினருக்கும்,காவல்துறையினருக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!