மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் குற்றாலம் தென் தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 160 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாக விளங்குகிறது.இந்த பகுதியில் ஏராளமான அற்புதமான நீர்வீழ்ச்சிகள் அமையப்பெற்றுள்ளன.
“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று சிறப்பித்து அழைக்கப்படும் குற்றாலம் அருவிகளின் தண்ணீர், மலையில் நிறைந்திருக்கும் பல அற்புத மூலிகைகள் காரணமாக மருத்துவ பண்புகள் நிறைந்து விளங்குகிறது. இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள்.

இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றால சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். தற்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது குற்றாலத்தில் அமையப்பெற்றுள்ள மெயின் அருவி என அழைக்கப்படும் பிரதான அருவி பேரருவி ஆகும். இது புத்தருவி என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் இந்த அருவியைச் சிவமது கங்கை என்றும் வடவருவி என்றும் சிறப்பிக்கிறது.
குற்றாலத்தில் உள்ள மிகப்பெரிய அருவியாக விளங்கும் இந்தப் பேரருவி, சுமார் 60 மீட்டர் உயரத்திலிருந்து பொங்கி பாய்கிறது. இந்த அருவிக்கு மேலே 19 மீ ஆழத்தில் உள்ள “பொங்குமாங்கடல்” என்ற இயற்கை பள்ளம் மூலம் நீரின் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு அருவியில் தண்ணீர் விழுகிறது.இந்தப் பள்ளம் நீர் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து நாம் குளிப்பதற்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. இந்தத் தண்ணீர் முழுவதும் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளதால் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.இங்குள்ள அருவி கரை மலைப்பாறை முழுவதும் சிவலிங்கங்கள் வெட்டப்பட்டு உள்ளன.

இந்த லிங்கங்கள் அருவி நீரில் இயற்கையாக அபிஷேகம் கண்டபடி உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியில் ஒருவர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தவறாமல் குளித்தால், இந்தத் தண்ணீரின் மகத்துவத்தால் உடலில் ஏற்படும் அனைத்து செரிமான மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் குணமடையும் என்று கூறப்படுகிறது.இந்த நீர்வீழ்ச்சி மிகப்பெரியது என்பதால், கிட்டத்தட்ட 200 முதல் 300 பேர்வரை ஒரே நேரத்தில் குளிக்க முடியும். இந்த அருவியின் கரையில் தான் புகழ்பெற்ற திருக்குற்றாலநாதரின் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.எனவே மிக முக்கியமான தீர்த்தக் கட்டமாகவும் விளங்கும் இந்த அருவியிலிருந்து பல கோவில்களின் கும்பாபிஷேகத்திருக்கும், கொடை விழாக்களுக்கும் புனித தீர்த்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.
பேரருவியில் மலைப்பாறையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் பாதுகாப்பு வளைவு ஒன்று அமையப்பெற்றுள்ளது. பருவ காலங்களில் அதிக மழை பொழிந்து அருவியில் அதிகமான வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது இந்தப் பாதுகாப்பு வளைவை தாண்டித் தண்ணீர் விழும். அப்படி விழும் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டிவிட்டால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி கிடையாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.அப்புற என்ன சட்டுப் புட்டுனு குடும்பத்தோட கிளம்பிருவோம்…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.