
பாஜகவை அலறவிட்ட திமுக ‘ஜி பே’ போஸ்டர்!
பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், தமிழகம் முழுவதும் மோடியின் முகத்துடன் ‘ஜி-பே’ (Ji pay) போஸ்டர்களை ஒட்டி திமுகவினர் அரசியல் களத்தை சூடேற்றியுள்ளனர்.
க்யூஆர் குறியீட்டைக் கொண்ட சுவரொட்டிகளில் “க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யுங்க, மோடி செய்த மோசடியைப் பாருங்க” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்கேன் செய்தவுடன், பாஜக மீது திமுக குற்றம் சாட்டிவரும் தேர்தல் பத்திர ஊழல் குறித்த விவரங்களை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வருகிறது. பிரதமர் மோடி புதன்கிழமை வேலூரில் நடைபெற்ற பேரணியில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்த மறுநாள் இந்த போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

திமுக ஊழலில் ஏகபோக உரிமை வைத்திருப்பதாகவும், பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும் மோடி குற்றம் சாட்டினார். திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ{ம் மக்கள் நலனைக் காட்டிலும் குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் சாடினார். ஊழலுக்கான முதல் காப்புரிமையை திமுக பெற்றுள்ளது, ஒட்டுமொத்த குடும்பமும் தமிழகத்தை சூறையாடுகிறது” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று, நாடு 5ஜி (தொலைத்தொடர்பு)யில் உலக சாதனை படைத்து வருகிறது, ஆனால் திமுக 2ஜி ஊழலால் அவப்பெயரை ஏற்படுத்தியது. காங்கிரஸ்ம், திமுகவும் ஊழல்வாதிகளை பாதுகாப்பதில் முன்னணியில் நிற்கின்றன. ஊழலை அகற்று என்று நான் கூறினாலும், ஊழல்வாதிகளை காப்போம் என்கிறார்கள்”
என்று மோடி மேலும் கூறினார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திமுக தலைவர்களான ஆ. ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போஸ்டர் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.