
திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கியது பங்குனி பெருவிழா!
அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்பை புல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24ஆம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறுகிறது.

தொடர்ந்து 26 ஆம் தேதி சூரனை வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். 27 ஆம்தேதி மாலை 7 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 28 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 29 ஆம் தேதி பங்குனி பெருவிழா தேரோட்டம் நடைபெறும்.
சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளு கிரிவலப் பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பா.சத்ய பிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம்,மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் வள்ளி தேவசேனா மண்டபத்தில் எதிர்வரும் பங்குனித் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு தலைவர் அவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும், திருக்கோயில் லட்சுமி தீர்த்தம் அருகே அமைந்துள்ள கூத்தியார்குண்டு சோமசுந்தரம் பிள்ளை வகையறா மண்டகப்படியின் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-போட்டோகிராபர் கார்த்தி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.