
குற்றாலம் அருவி
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதி பழைய குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. ஒரு சில விநாடிகளில் வெள்ளம் சீறிப் பாய்ந்ததால் அருவியில் குறித்துக்கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் பீதியுடன் வெளியேறினர். சிலர் வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் சக சுற்றுலாப் பயணிகள் மீட்டனர்.
வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த அஸ்வின் (17) என்ற சிறுவன் உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மீட்டனர்.
வெள்ளப் பெருக்கு காரணமாகவும், தென்காசி மாவட்டத்துக்கு இன்னும் சில நாட்கள் கனமழை மற்றும் மிக கனமழை இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதாலும் மறு உத்தரவு வரும் வரை குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஆனால், கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் அடுத்தடுத்த நாட்களில் மிதமான மழையே பெய்தது. குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. இருப்பினும் அருவிகளில் குளிக்க தடை நீக்கப்படவில்லை. தொடர்ந்து 6-வது நாளாக இ்ன்றும் தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.