33 ஆண்டு காலமே இம்மண்ணுலகில் வாழ்ந்து மறைந்தவர்… யார் இந்த பரிதிமாற் கலைஞர்? பலரும் அறியாத வரலாறு

பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்6.7.1870 திராவிட மொழி ஏது? உண்ணாட்டு மொழி ஏது?அயல் நாட்டிலிருந்து வந்து இறங்கிய தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் 1856இல் “திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” பெயரில் நூலொன்றை எழுதி வெளியிட்டார்.

அதில் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட பனிரெண்டு மொழிகளுக்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று பெயரிட்டு அழைத்தார். அவர் எல்லா மொழிகளுக்கும் தலை மொழியாகிய தமிழோடு மற்ற மொழிகளையும் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்த்தது தமிழுக்கு நேர்ந்த மாபெரும் இழுக்காகும்.அவருக்குப் பின் தோன்றிய பரிதிமாற்கலைஞர் காலத்திலும் திராவிடமொழிக் குடும்பம் போலவே, “உண்ணாட்டு மொழிகள்” என்றும் அழைக்கப்பட்டது. தமிழுக்கு கேடு தரும் இந்த ஈனச்செயலுக்கு அன்றைய சென்னைப் பல்கலைக்கழகமும் ஒத்துழைப்பு தந்தது. அப்போது “உண்ணாட்டு மொழிகள்” எனும் பெயரில் தமிழ்மொழி களங்கப்படுவதை எதிர்த்து பரிதிமாற் கலைஞர் ஒருவர் தான் கொந்தளித்தார். வட நாட்டில் சமஸ்கிருதத்தோடு அதன் வழிமொழிகள் இணையாக வைத்துப் பேசப்படுவது இல்லை.

ஆனால் தென்னாட்டில் மட்டும் தமிழ் மொழியோடு அதன் வழிமொழிகள் இணையாக வைத்துப் பேசப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அத்தோடு வாய்மூடி மெளனம் காத்த தமிழ்க் கற்றரிந்தோரை வன்மையாகக் கண்டிக்கவும் தயங்கவில்லை.உயர்தனிச் செம்மொழியாகிய தமிழோடு தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளை திராவிடமொழிகள் என்றும், உண்ணாட்டு மொழிகள் என்றும் அழைத்திருப்பதை அன்றைய தமிழ் கற்றறிந்தோர் தடுத்து நிறுத்தத் தவறியதால், தற்போது தமிழுக்குத் தந்த செம்மொழித் தகுதியை அதன் வழிமொழிகளாகிய தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தட்டிப் பறித்துச் சென்று விட்டன. தமிழோடு சேர்த்து அதன் வழிமொழிகளுக்கும் தில்லி சமசுகிருத ஆட்சியாளர்கள் செம்மொழித் தகுதி தந்தததை கண்டித்துப் பேசுவதற்கு ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இன்றுவரை துணிவு கிடையாது.

பரிதிமாற் கலைஞர் தொலை நோக்கோடு அன்று சிந்தித்து கூறியவற்றை ஒவ்வொரு தமிழரும் படித்து தெளிவு பெறுதல் வேண்டும். இதோ பரிதிமாற் கலைஞர் எழுதுகிறார்:“இனியிது நிற்க. தமிழ்நாட்டில் ஆங்கிலவரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு, கன்னட, மலையாள துளுவங்களோடு அடக்கி “உண்ணாட்டு மொழிகள்” என வகைப்படுத்தினர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? ஆரிய மொழிகளுள் தலை நின்ற வடமொழியை அதன் பாகதகங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமை போலத் தமிழ்மொழியையும் அதன் வழிமொழிகளொடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம்.

இவ்வாறாகவும் சென்னை சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவுபடுத்தி வகுத்த போதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்க வேண்டும்.அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழ் மொழியாளர்.வடமொழி, இலத்தீன்,கிரீக்கு முதலியன போலத் தமிழ் மொழியும் ‘உயர்தனிச் செம்மொழி’ யாமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பல மொழிகட்குத் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவுடைமையுமுள்ள மொழியே ‘உயர் மொழி’. இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்துத் தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க.தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே ‘தனிமொழி’ எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியினுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிது மிடர்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இது இந்திய மொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்ப முடிந்தது.

ஆதலின் தமிழ் தனிமொழியேயென்க. இனி செம்மொழியாவது யாது?திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழி யாம் என்பது இலக்கணம்…நாட்டின் நாகரீக முதிர்ச்சிக்கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைகளும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷைச் சொற்களன்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவனவாம்.ஆகவே, தமிழ் தூய மொழியுமாம். எனவே, தமிழ் செம்மொழியென்பது திண்ணம். இதுபற்றியன்றே தொன்றுதொட்டுத் தமிழ்மொழி ‘செந்தமிழ்’ என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் ‘உயர்தனிச் செம்மொழி’ யேயாம் என்ப நிச்சயம்.இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை “உண்ணாட்டுப் பன்மொழி”களோ டொருங்கேண்ணுதல் தவிர்ந்து, “வடநாட்டுயர் தனிச்செம்மொழி சமஸ்கிருத” மெனக் கொண்டாற் போலத் “தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக்” கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்.-பரிதிமாற் கலைஞர்.

(குறிப்பு : பரிதிமாற் கலைஞர் அவர்களால் நூற்றாட்டுகட்கு முன் எழுதப்பட்ட இக்கட்டுரை பனிரெண்டாம் வகுப்பு ‘பொதுத்தமிழ்’ பாடநூலிலி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!