
சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன.
ஆதிகாலத்தில் இருந்த மனிதன் பசிக்காக விவசாயத்தைக் கண்டுபிடித்தான். இக்காலத்தில் உள்ள மனிதனோ அதனை பணத்துக்காக அழித்து வருகிறான்.
கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3 கோடியே 25 லட்சம் ஏக்கர். இதில் 1 கோடியே 27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கொண்ட விவசாய விளை நிலங்களாகவும், மானாவாரி நிலங்களாகவும் உள்ளன. அக்காலங்களில் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டது நமது தமிழகம்.
ஆனால், இன்றைய நிலையோ விளை நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தற்பொழுது விளைநிலங்களாக இல்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இப்படி வேளாண் பாதையிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது.
புதிதுபுதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு விவசாயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கூறுபோட்டு கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டின் இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நாடு நமது நாடு. அத்தகைய விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை. உணவு உற்பத்தி இல்லாமல் வேறு எந்த வளர்ச்சி இருந்தும் எந்த பயனும் இல்லை என்பது உண்மை.

வெளிநாடுகளில் இருப்பது போல வானளாவிய கட்டிடங்கள் இங்கேயும் வருமா என்று எண்ணிக்கொண்டிருந்த காலமும் நம் எண்ணத்தில் இருந்தது. இன்றோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகப் மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் மேலே எழும்பிக் கொண்டிருக்கின்றன.
கோவை, மதுரை போன்ற சிறு நகரங்களிலும் கூட இன்று பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. பல கட்டுமான நிறுவனங்கள் நிலத்தை வாங்கிப் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டி விற்கிறார்கள். எனவே இன்று நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
நிலத்தின் மதிப்பு உயர்வதால் இன்று விளை(விவசாய) நிலங்கள் எல்லாம் ‘விலை’ நிலங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் தரிசு நிலங்களை வாங்கி, அதை மனை போட்டு விற்றார்கள். ஆனால், இன்றோ விவசாய நிலங்கள் அழிக்கப்படு வீட்டு மனைகளாக ஆகிவருகின்றன.

இந்தப் பணிகள் எல்லாம் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கீழ் முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இப்படி நிறைய விளை நிலங்கள் ‘விலை’ நிலங்களாக மாறிவிட்டன. அதாவது தனியார் மூலம் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறின. இதுவரை தனியார் செய்துவந்ததை இனி அரசும் செய்யப் போகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.
விவசாய விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்று வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாய விளை நிலங்களில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை விவசாயம் செய்யாமல் இருந்துவிட்டு, அவை பயனற்று தரிசு நிலமாக இருப்பதாகக் கூறி உள்ளாட்சி நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புத்திசாலித்தனமாக அனுமதி பெற்று வீட்டு மனைகளாக மாற்றி விடுகின்றனர்.
இது சம்பந்தமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் விவசாய விளை நிலங்களை விலைக்கு வாங்கிய ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் தற்போது பிளாட் போட்டு வீட்டுமனையாக விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விளை நிலங்களுக்கு வீட்டடிமனை அங்கீகாரம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கும், மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறையினருக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- > வேளாண் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அரசு கடுமையான தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
- > விவசாய காரணங்களைத் தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்தால், அதை சார்பதிவாளர் தடுத்து நிறுத்த வேண்டும்.>

- விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- >விவசாயத்துக்காக பெறப்படும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.
- >ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும்.
- > விவசாயத் தொழிலை லாபகரமான தொழிலாக்குவதற்கு எந்த வகையில் எந்தெந்த பயிர்களை எப்படி சாகுபடி செய்ததால் உரிய லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவசாயம் பாதுகாப்பு அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கடமையுமாகும். உணவு என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் தேவை.இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும். கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
உழவைக் காப்போம்…! உலகை மீட்போம்…!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.