
கொலை
சென்னை: சென்னை ஐசிஎஃப் பகுதியில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஐசிஎஃப் , டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (29). இவர் நேற்று இரவு (மே., 26) அதே பகுதியில் எம்.ஆர்.நாயுடு 2வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வில்லிவாக்கம் போலீஸார், உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரத்தீவ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
பிரபல ரவுடியான ரஞ்சித் என்கின்ற டபுள் ரஞ்சித் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு முன்பகை காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அக்கொலை வழக்கில் உதயகுமார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக உதயகுமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.