
கொடுங்கையூர் பகுதியில் ஒரு பீடிக்காக தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, கஞ்சா வியாபாரி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (60). இவரது மனைவி கோமதி (50). இவர்களுக்கு சரவணன் (28), கோபி (எ) கில்லா (27) ஆகிய 2 மகன்களும், சந்தியா (24) என்ற மகளும் உள்ளனர். இதில் கோபி சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொருக்குப்பேட்டையில் உள்ள தனது நண்பர் குமாரின் வீட்டிற்குச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து கோபி மது அருந்தியுள்ளார். அங்கு, அளவுக்கு அதிகமாக மது அருந்திய கோபி, தள்ளாடிக்கொண்டே கொடுங்கையூர் பகுதி வழியாக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது தங்கை சந்தியாவிற்கு போன் செய்து, என்னால் வர முடியவில்லை, என்னை வந்து அழைத்துச் செல், என கூறியுள்ளார். பின்னர் கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் மெயின் ரோடு அருகே கோபி மெல்ல நடந்து வந்தபோது, அங்கு இருந்த கொடுங்கையூர் எழில் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ஜான்சன் (எ) கருப்பு (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா (55) ஆகிய இருவரும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கோபியை பார்த்து, ‘பீடி உள்ளதா’ என சிவா கேட்டுள்ளார். அதற்கு போதையில் இருந்த கோபி, ”யாரிடம் பீடி கேட்கிறாய். அடித்து உதைப்பதற்குள் இங்கிருந்து ஓடிவிடு,” என சிவாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சிவாவை கோபி அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவா மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் சேர்ந்து கோபியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு தங்களது பைக்கில் கோபியை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் அதே தெரு வழியாக சென்றுள்ளனர். அப்போது வேகத்தடையில் சிக்கி பைக் கீழே விழுந்தது.
இதனையடுத்து ஜான்சன் மற்றும் சிவாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை கோபி அடிக்க முயன்றுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் கோபியை அடித்து கீழே தள்ளிய ஜான்சன் மற்றும் சிவா ஆகிய இருவரும், அருகில் கிடந்த ஆட்டுக்கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோபியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் கோபி துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலை நசுங்கி இருந்ததால் கோபியின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் இறந்தது கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கோபி என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் கஞ்சா போதையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த ஜான்சன் மற்றும் சிவா ஆகிய இருவரையும் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதில் ஜான்சன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் அதே பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர். இதேபோன்று சிவா மீதும் கஞ்சா வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளன. கஞ்சா போதையில் இருந்த இருவரும் மது போதையில் வந்த கோபியிடம் தகராறு செய்து அவரை கொடூரமாக கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.