விடுதலை: வெற்றிமாறனுக்கு உறுதுணையாக இருந்தது வேல்ராஜ் -இளையராஜாவும் தான்… இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று!

விடுதலை படத்திற்கு வெற்றிமாறனுக்கு உறுதுணையாக இருந்தது வேல்ராஜும் இளையராஜாவும் தான் -சீமான்

விடுதலை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் தங்கை பாவானிஸ்ரீயும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் குறித்த தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


அந்த வகையில் ட்ரேட் அனாலிஸிஸ்ட்டும் திரைப்பட விமர்சகருமான ரமேஷ் பாலா பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை பார்ட் 1 முதல் பாதி : இதுவரை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது என்றும் டைரக்டர் வெற்றிமாறன் அவர் வழியில் இருக்கிறார்.. சூப்பர். சூரி அவரது கதாபாத்திரத்தில் அவ்வளவு கண்ணியம்.. அற்புதமான நடிப்பு.. என பாராட்டியுள்ளார். இளையராஜாவின் பின்னணி இசை சூப்பர். விஜய்சேதுபதி இண்டர்வெலுக்கு முன்பாகதான் வருகிறார். பவானிஸ்ரீ நன்றாக நடித்துள்ளார். இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


மேலும் லக்ஷ்மி காந்த் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், சூரி செம்ம பொருத்தம்.. அவரது அப்பாவித்தனம் மிகவும் இயல்பாக இருந்தது. நேர்மையான காவலராக பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை இண்டர்வெல்- அந்த இடத்தின் கதை மற்றும் புவியியல் ஆகியவற்றில் ஆழ்ந்துவிட்டேன். இதுவரை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும் இது கதையின் நாயகர்களின் காலம் ! என்றும் மனதையும் காதையும் இம்சிக்காத தேனாய் பின்னணி இசை! என்றும் விடுதலை படத்தை குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் விமர்சகர் ராஜசேகர் பதிவிட்டுள்ள டிவிட்டில், விடுதலை முதல் பாதி – காவியத் திரைப்படத் தரத்தை மீண்டும் வெற்றிமாறன் வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் விபத்தின் பின்விளைவுகளை உள்ளடக்கிய முதல் பதினைந்து நிமிடங்கள் இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று! பிரம்மாண்டம் என்பது பளபளக்கும் செட் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டுமல்ல, திரையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான உணர்ச்சிகள், கஷ்டங்கள், கொடூரமான வன்முறை மற்றும் வலி ஆகியவற்றை நம்பவைத்து வெளிப்படுத்தும் விதம் உண்மையிலேயே விதிவிலக்கானது! அரசியல் ரீதியாக அவர் எப்போதும் சமநிலையானவர்! அதை விரும்புகிறேன்.. என சூப்பர் ஈமோஜியை குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் படம் பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

இப்படம் ஆங்கிலத் திரைப்படத்திற்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளது. சூரி மற்றும் விஜய் சேதுபதியும் தனது நடிப்பை மிகத் தெளிவாக வெளிக்காட்டி உள்ளனர். G.V பிரகாஷ்-ன் தங்கை பவானிஸ்ரீ மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் வெளிவர இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஆதரவாக இருந்தது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசைஞானி இளையராஜாவும் தான் என கூறினார். சண்டைக் காட்சிகள் படத்தில் மிகவும் அருமையாக உள்ளது எனவும் படத்தில் ரயில் பட காட்சியின் போது எட்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவும் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!