மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் தலைவர்களை – பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் “பட்டினப் பிரவேசம்” என்பது வழக்கமாக நடந்து வந்துள்ளது. வரும் 22.05.2022 அன்று இவ்வாண்டுக்கான பட்டினப் பிரவேசம் பீடாதிபதியை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுடன் நடத்த ஆதீனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், திராவிடர் கழகமும் மற்ற அமைப்புகளும் மனிதரை மனிதர் சுமக்கும் இந்த மனிதநேயமற்ற செயலுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று ஆட்சியாளர்களிடம் கோரி யுள்ளார்கள். அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு வரும் 22.05.2022 அன்று, இப்பொழுதுள்ள ஆதினகர்த்தர் மயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் அவர்களை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தடை விதித்துள்ளது.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசின் இத்தடையை வரவேற்கிறேன்.

இவ்வாறு ஆதினகர்த்தரை மனிதர்கள் சுமக்கும் சம்பிரதாயத்திற்குத் தடை போடக் கூடாது என்று ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆதினகர்த்தரை இவ்வாறு பல்லக்கில் தூக்கிச் சுமப்பது பல்லாண்டுகாலமாக நடந்து வரும் பழக்கம் என்றாலும், மனித நேயத்திற்கும் மனித சமத்துவத்திற்கும் எதிரான இந்த வழக்கத்தை கைவிடுவதே இப்போதைய தேவை.

ஆதினகர்த்தரை பல்லக்கில் தூக்கிச் சுமப்பதை தவிர்க்க முடியாத ஒரு செயலாக நம்முடைய தமிழ்ச் சிவநெறி ஆன்மிக நூல்கள் எதுவும் கூறவில்லை. நம்முடைய தேவாரம், திருமந்திரம், திருவாசகம் போன்ற சிவநெறி நூல்கள் எதுவும் இவ்வாறான சடங்கை வலியுறுத்தவில்லை.

ஒருவேளை, பழைய பழக்கவழக்கமாக இருந்தாலும் இக்காலத்திற்குப் பொருந்தாத நடைமுறை களைக் கைவிட்டுவிடுவதே தமிழ்ச் சிவநெறி ஆன்றோர்கள் கற்பித்திருக்கும் பாடமாகும்.

தருமபுரம் ஆதினகர்த்தர் தமிழ்ச் சிவநெறிகளை பின்னுக்குத் தள்ளி, சமற்கிருத பிராமணிய சம்பிரதாயங்களையும், சமற்கிருதத்தையும் போற்றி, அவற்றைக் கடைபிடிப்பவர். அருள்கூர்ந்து, அவர் இதிலாவது அரசின் கருத்திற்கு, மக்களின் கருத்திற்கு செவிகொடுத்து, தாமாக முன் வந்து மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வரும் பழக்கத்தைக் கைவிடுகிறேன் என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, எந்த நிர்பந்தத்திற்கும் உட்படாமல் ஏற்கெனவே எடுத்த முடிவின்படி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் ஆதீனகர்த்தர் பவனி வருவதற்கான தடையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அவர்கள் தெரிவித்தார்.

================================

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!