
பல 100 ஆண்டுகளாகியும் பழமை வாய்ந்த அதே ஐயப்பன்… பல ஆச்சரியமும், அதிசயங்களும் நிறைந்த ஐயப்பன் கோவில்
கேரள மாநிலம், புனலூர் நகரில் இருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து வனப்பாதைக்குள் 28 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அச்சன் கோவில் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில், அச்சம் நீக்கி அருளும் அரசனாக ஐயப்பன் அருள்பாலித்து வருகிறார்.

இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிக்குள் ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்தக் கோவிலின் கருவறையில், பூர்ணா – புஷ்கலை என்னும் இரண்டு தேவியர்களுடன் அரசரின் தோற்றத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இதனால் இங்கிருக்கும் ஐயப்பனைக் ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கின்றனர்.
இங்கிருக்கும் ஐயப்பன் வலது கையில் சந்தனம் மற்றும் புனித தீர்த்தம் இருக்கிறது. இதனால், ஐயப்பனை ‘பெரும் மருத்துவர்’ என்றும் மலையாளத்தில் மகாவைத்யா என்றும் அழைக்கின்றனர். இதனாலயே விஷப்பாம்பு கடித்தவர்கள் இரவு நேரத்தில் கூட இங்கு வந்து கோயில் மணியை அடித்தால், கோவில் நடை திறக்கப்பட்டு ஐய்யப்பனின் இடது கையில் இருக்கும் சந்தனமும் புனித தீர்த்தமும் வழங்கப்பட்டு பாம்பு கடித்தவர்களின் விஷத்தைப் முறிக்கும் என்ற நம்பிக்கை இன்று வரையும் நடந்து வருகிறது. ஆலய வளாகத்தில், சிவன், பார்வதி, கணபதி, சுப்பிரமணியர், நாகராஜா, நாகயட்சி, மாளிகப்புறத்தம்மாள், சப்பானி மாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர். இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன மேலும் தமிழ் முறைப்படியே இங்கு பூஜைகளும் வழிபாடுகாளும் நடைபெறுகின்றன.

பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட பல ஐயப்பன் ஆலயங்களில் இருக்கும் ஐயப்பன் சிலைகள், நெருப்பு மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்து பின்னர் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், அச்சன் கோவிலில் இருக்கும் ஐயப்பன் சிலை மட்டும் பழைய சிலையாக அப்படியே இருக்கிறது. இக்கோவிலில் ஐயப்பன் பூர்ணா, புஷ்கலை ஆகிய இரு தேவியர்களுடன் முழுமையான குடும்பத்தினராக இருந்து அரசாட்சி செய்கிறார். ஐயப்பன் கோவில்களில், சபரிமலை ஆலயத்துக்கு அடுத்தபடியாக புகழ் பெற்ற கோவிலாக அச்சன்கோவில் ஐயப்பன் கோவில் திகழ்கிறது. ஐயப்பன் கோவில்களில் சபரிமலை, அச்சன் கோவில் ஆகிய இடங்களில் மட்டுமே பத்து நாட்கள் திருவிழா u நடைபெறுகிறது.

மேலும் ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு எனும் மார்கழி மாதம் முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை பெருவிழா மகோத்ஸவம் நடைபெறும். இந்தவிழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடத்தப் பெறுகிறது. மகரம் எனும் தை மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் பூச்சொறிதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. பிற ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் நடைபெறும் தேரோட்டத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்தும் மலர்மாலைகள் கொண்டு வரப்படுகின்றன குறிப்பாக மல்லிகைக்கு பெயர் போன மதுரையிலிருந்து பல மலர் மாலைகளை பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்குவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சன்கோவில் ஐயப்பன் ஆலயத்தில், ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், இங்கிருக்கும் அம்மன் சன்னிதியில் பட்டுத்துணி, வளையல் போன்றவற்றுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.