தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக கொண்ட மேதகு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்து “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் உலக தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.
இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.
இந்த மேதகு திரைப்படத்தினை பார்வையிட்ட நடிகர் சத்யராஜ், இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் வரலாற்றை கலை வடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டப்போகும் ‘மேதகு’ போன்ற பல்வேறு படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது பாராட்டுக்குரியது.
தமிழீழ வரலாற்றை உண்மையாகச் சொல்லும் – “மேதகு”
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை – தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளமைக்கால வரலாற்றைச் சொல்லும் திரைப்படமாக “மேதகு” திரைப்படம் வெளிவந்துள்ளது.
வடநாட்டவர்கள் இயக்கத்தில் “அமேசான் பிரைம்” ஓ.டி.டி. தளத்தில் வந்துள்ள “தி பேமிலிமேன் சீசன் – 2” என்ற இணையத் தொடரும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த “ஜெகமே தந்திரம்” என்ற திரைப்படமும் தமிழீழ விடுதலைப் போராட் டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ள சூழலில், “மேதகு” திரைப்படம் வந்துள்ளது மிகமுக்கியமானது. உண்மை வரலாற்றைப் பதிவு செய்யும் அற்புதமான முன்னெடுப்பு!
விடுதலைப்புலிகள் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைக் குடிகாரராகவும், போராட்ட வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்பவராகவும் மிகக் கேவலமான முறையில் “தி பேமிலிமேன் சீசன் – 2” தொடரில் சித்தரித்து இருந்தார்கள். “ஜெகமே தந்திரம்” என்ற திரைப்படத்தில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் கடத்தும் கும்பல் என்பதுபோல் காட்டியிருப்பார்கள். இப்படங்கள் வெளியீட்டில் எவ்விதச் சிக்கலும் எழவில்லை! ஆனால், “மேதகு” திரைப்பட வெளியீட்டில் அவ்வளவு தடைகள்!
அதிகாரத்தின் நிழலில் நின்று பேசும் “தி பேமிலிமேன் சீசன் – 2”, “ஜெகமே தந்திரம்” போன்ற படங்களுக்கு, “மேதகு” திரைப்படக் குழுவினர் தங்கள் மொழியில் பதில் அளித்துள்ளனர்.
தமிழீழத் திரைக்களம் சார்பில் “மேதகு” திரைப்படம் பி.எஸ். ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இளமைக்கால வாழ்க்கை வரலாற்றை உண்மைத் தன்மையுடன் நேர்மையாக இயக்கியுள்ள இயக்குநர் தி. கிட்டு அவர்களுக்கு நம் பாராட்டுகள்! நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இப்படியொரு படத்தைத் தயாரிக்க முன்வந்த திரு. செ. குமார், திரு. செயக்குமார் இருவருக்கும் பாராட்டுகள்!
இப்போதெல்லாம் இதுவொரு கற்பனைக் கதை என்று படத்தின் தொடக்கத்தில் போட்டுவிட்டு வரலாற்றைத் திரித்தும், அபத்தமாகவும் திரைப்படங்கள் வருகின்றன.
“மேதகு” படம் தொடர்பாக சர்ச்சைகள் எழுமாயின், அதனை தயாரிப்பாளர்கள் எதிர் கொள்வார்கள் என்ற வரிகளோடு “மேதகு” படம் தொடங்குகிறது!
தலைவர் பிரபாகரன் பிறப்பு தொடங்கி, தமிழினத் துரோகியாக விளங்கிய யாழ் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை சுட்டுக் கொல்வது வரை முதல் பாகம் வெளியாகியுள்ளது.
வல்வெட்டித்துறையின் பிரபலமான திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திரு. திருவேங்கடம் வேலுப் பிள்ளை, பருத்தித்துறை நாகலிங்கம் வழிதோன்றிய பார்வதி இணையரின் நான்காவது மகனாகப் பிரபாகரன் பிறக்கிறார்.
ஒரு அண்ணன், இரண்டு அக்காமார்கள்! பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட காணி அதிகாரியாக பணிபுரிகிறார்.
பண்டாரநாயக்கா அதிபராக இருந்தபோது, தமிழ் எழுத்துக்களை அழித்து “ஸ்ரீ” என்ற சிங்கள எழுத்தை எழுதச் சொல்லி சிங்களவர்கள் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்கள், 1970களில் தமிழ் மாணவர்களின் மேற்படிப்பைத் தடுக்க சிங்கள அரசு கொண்டு வந்த கல்வித் தரப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்த மாணவர்கள் போராட்டம் – இவைகளை சரியான முறையில் இயக்குநர் கிட்டு பதிவு செய்துள்ளார்.
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது முதல் இனக் கலவரம் 1958இல் நடந்தது. பாணாந்துறையில் குருக்கள் ஒருவரை சிங்களவர் உயிரோடு எரித்தனர். சிறுவர்களை கொதிக்கும் தார்ப்பீப்பாய்களில் போட்டுக் கோரமாகக் கொன்றனர். இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, சிறுவன் பிரபாகரன் தன் தந்தையிடம், “நாம ஏன் திருப்பி அடிக்கல?” என்று கேட்கும் காட்சி உணர்ச்சிமயமானது.
தமிழர் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், சிங்கள அரசுப் பேருந்தைக் கொளுத்தும் போது, நண்பர்கள் பயந்துவிடும் சூழலிலும் தன்னந்தனி ஒருவனாக பிரபாகரன் துணிச்சலுடன் அதில் ஈடுபடுகிறார். அவரது இலட்சியத்தில் உறுதியான நிலை பாட்டையும், போர்க்குணத்தையும் வெளிப்படுத்துவதாக இக்காட்சி உள்ளது.
துப்பாக்கியை முதல்முதலாகப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி, துப்பாக்கியைத் தொட்டுத் தடவியது கன்னத்தில் தடவும்போது ஏற்படும் பரவசத்தை ஏற்படுத்துகிறது.
எந்தவொரு செயற்கையான கதாநாயக பிம்பமும் இல்லாமல் இயல்பான தன்மையில் பிரபாகரன் பாத்திரத்தைப் படைத்துள்ளார்கள். ஆனால், வசனத்தில் – நடிப்பில் போர்க் குணத்தை சரியாகவே காட்டு கிறார்கள். இளையவயது பிரபாகரன் தோற்றத்தில் நடிகர் குட்டிமணி சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தின் இசையமைப்பாளர் பிரவின்குமார் பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிளிர்கிறார். ஒளிப்பதிவாளர் ரியாஸ், படத்தொகுப்பாளர் இளங் கோவன் ஆகியோர் சிறப்பாகத் தங்கள் பணியை செய்து, “மேதகு”வை செழுமையுறச் செய்துள்ளனர்.
“பஞ்சவர்ணக்கிளி” திரைப்படத்தில் இடம்பெறும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “தமிழுக்கு அமுதென்று பேர்” பாடல், பி. சுசிலா அம்மாவின் குரலில் கேட்கும்போது ஏற்படும் உணர்வு தனித்துவமானது.
“தமிழுக்கும் அமுதென்று பேர்” எனப் பாடலில் கவிஞர் திருக்குமரன் வரிகளும், பிரவீன்குமாரின் இசையும் உற்சாகத் துள்ளளை ஏற்படுத்துகிறது. ரோஜா ஆதித்யா குரல் தனிச்சிறப்பு!
இயக்குநர் கிட்டுவின் வரிகளில் உருவான “தாய் நிலமே மீண்டும் வருகிறோம்”, “உதிரம் வழிய” ஆகிய பாடல்கள் அருமை.
சிங்கள புத்த பிக்குகளின் நரித்தனங்களை நன்றாக அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் தற்கொலைப் போராளி சிவக்குமரன், இறப்பு மிகச் சாதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த தாக வானொலியில் செய்தி சொல்லப்படுகிறது. மிகக் குறைவானவர்களே தாக்குதலுக்குள்ளாகின்றனர் என்பதுபோல் கலவரக் காட்சி உள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஒன்பது பேர் சாவுக்குக் காரணமான யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் பொன்னாலை வரதராசப் பெருமாள் கோவில் அருகே சுட்டுக் கொல்கிறார். “வரலாறு தொடரும்” என திரைப்படம் முடிகிறது,
நிராயுதபாணியாக உள்ள தமிழர்களை ஆயுதங்களால் சுட்டுக் கொல்லும் சிங்களவர் ஆதிக்கத்தை ஒழிக்க, திருப்பித் தாக்க வேண்டும் என்று கூறுபவரின் சொல்லையும் – மண்ணைக் காக்க, மக்களைக் காக்க போராடுவோம் என்ற தலைவர் பிரபாகரன் வரலாற்றையும் இராசசேகரன், பெருமாள் ஆகியோரின் தெருக்கூத்து மூலமாக சொல்லியுள்ளது மிகச்சிறப்பான திரைமொழி!
இவையெல்லாம் ”மேதகு” திரைப்படத்தின் அடுத்தடுத்த பகுதிகள், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சங்ககாலத் தமிழர்களின் அறம், அறிவு, வீரம் ஆகியவற்றை நம் சமகாலத்தில் உலகிற்கு எடுத்துரைத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அதை மக்களுடன் இணைந்து முன்னெடுத்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையையும் வெளிப்படுத்தும் ”மேதகு” போன்ற திரைப்படங்கள் காலத்தின் தேவையாக உள்ளன. நாம் உண்மைகளைக் காட்சிப்படுத்தத் தவறியதால்தான், “பொய்கள்” ஆட்டம் போடுகின்றன. எனவே, இதுபோன்ற கலைப் படைப்புகளை தமிழ் மக்கள் பேராதரவு கொடுத்து வரவேற்க வேண்டும்!
“மேதகு” படத்தை https://bsvalue.com இணைய தளத்தில் கட்டணம் செலுத்தி குடும்பத்தினரோடு பாருங்கள். நம் சமகால நாயகனை உங்கள் இல்லங்கள் வழியாக அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு சேருங்கள்!
படக்குழுவினருக்கு மீண்டும் எமது பாராட்டுகள்!
www.lemooriyanews.com
===================================