திருச்செந்தூரில் முருகன் தங்கமுத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 25-ந் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலையில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார். 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கோவில் சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்கள் காட்சி கொடுத்தனர்.

மாசித் திருவிழாவின் 4-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் உலா வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!