அடியக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 17 வயதான அவரது மகளுடன் அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது பெமினாஸ் என்ற இளைஞர் காதலிப்பதாகக் கூறி பழகி வந்ததாக தெரிகிறது. இதனை விஜயகுமார் – தீபா தம்பதி கண்டித்ததுடன், தனது மகளுடன் பழகக் கூடாது என முகம்மது பெமினாஸை எச்சரித்துள்ளனர்.

ஆனால், முகம்மது பெமினாஸ், அந்த சிறுமியுடன் தொடர்ந்து பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் – தீபா தம்பதி, முகம்மது பெமினாஸ் வீட்டுக்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தலை மற்றும் கையில் பலத்த காயமடைந்த முகம்மது பெமினாஸை, உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையே, பெமினாஸின் உறவினர்கள், விஜயக்குமாரின் மருந்துக்கடையை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், விஜயகுமார் – தீபா தம்பதியை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
