கட்டை வண்டியில் போக சொல்லும் சீமான்! திமுக சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளராக சந்திரகுமாரை அறிவித்திருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தாங்கள் ஊர்வலமாக வந்து மனுத் தாக்கல் செய்ய காவல் அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகவும், தேர்தல் ஆணையமும் போலீசாரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். திமுக அராஜகத்தை தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சந்திரகுமாரும் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சீதாலட்சுமி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” பொய்யும் புரட்டும் பேசிக்கொண்டு இருக்கிறவர்கள், அரசியல் கட்சிகளிலேயே அக்கட்சி ஒரு வியாதி. அவர்களுக்கெல்லாம் பதில்சொல்ல நான் தயாராக இல்லை. நவீன அறிவியல் வளர்ச்சியில் நாடு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கட்டைவண்டியில் போ என சொல்பவரை தலைவராக வைத்துக்கொண்டு, அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து, அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக பார்க்கிறேன்.
தனிப்பட்ட முறையில் இதை காலத்தின் கொடுமையாகத்தான் கருதுகிறேன். எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதை நாங்கள் கண்கூடாக கண்டிருக்கிறோம். ஈரோட்டிலே பிறந்து வளர்ந்த எனக்கு இன்று 57 வயதாகிறது. கிட்டத்தட்ட 13 வயதிலேயே நான் பொது வாழ்க்கைக்கு வந்தவன். ஈரோட்டைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும்.
ஈரோட்டில் எந்தப்பகுதி எப்படி இருக்கிறது என்பதுவரை எனக்குத் தெரியும். அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கேயோ இருந்து இங்கு வந்து எழுதிக்கொடுத்ததை பேசிவிட்டு செல்பவர்களுக்கு எல்லாம் நான் பதில்சொல்லத் தேவையில்லை. ஈரோட்டிற்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் அமைச்சர் முத்துசாமி தொலைநோக்கு சிந்தனையோடு முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். திமுக இந்த தேர்தலில் வெற்றி நிச்சயம்” என கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.