அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய பங்கு மற்றும் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவின் தொடக்க விழா அழகப்பபுரம் நேரு பூங்கா அருகில் நடந்தது.
தொடக்க விழாவை முன்னிட்டு நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் 101 பனை விதைகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அருட்திரு செல்வராயர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை மைக்கிள் தெரசா முன்னிலை வகித்தார். பங்கு பேரவை துணைத் தலைவர் விக்டர் நவாஸ் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் அடிகளார், வட்டார முதன்மை குரு பிரிட்டோ அடிகளார் பங்குத்தந்தை செல்வ ஜார்ஜ் அடிகளார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பனம் விதைகளை நட்டு சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில்பிரிட்டோ அடிகளார் பேசும் பொழுது முந்தைய காலத்தில் நாம் இயற்கையோடு வாழ்ந்தோம். அதனால் நமது முன்னோர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்தனர். ஆனால் நாம் இயற்கையை அழித்து வருகிறோம். தற்போது அரசு இயற்கையை பாதுகாத்திட பல்வேறு வகையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு முயற்சி எடுத்தாலும் பொதுமக்களாகிய நாம் அரசுடன் இணைந்து இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே நாளைய சந்ததிக்கு வளமான நாட்டை உருவாக்க முடியும். எனவே இயற்கையை பாதுகாப்போம். பனை விதைகளை சாலை ஓரங்கள் மற்றும் நீர்நிலை ஓரங்களிலும் நடுவோம். தமிழக அரசின் மரமான பனை மரத்தை பாதுகாத்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அழிந்து வரும் பனை மரத்தையும் பனை தொழிலையம் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என கூறினார்.
தொடர்ந்து அருட்த் தந்தையர்கள் ஜெபநாதன், கலைச்செல்வன், பெப்பி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முடிசூடும் பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.