சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்?!

ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸில் இணைந்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் திரும்புவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் உயர் செயல்திறன் மையத்தின் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த உயர் செயல்திற மையம் சென்னையின் புறநகர்ப்பகுதியில் வருகிறது. அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் இந்த மையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.

இந்த மாற்றத்தினால் இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்ட வீரர்கள் ஏலத்தில் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கேவுடன் இணைவதற்கான வலுவான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை வீரர்கள் ஏலத்தில் சிஎஸ்கேயால் அஸ்வினை வாங்க முடியாவிட்டால், வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு அவரை வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

இது தொடர்பாக சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறும்போது, “இது முற்றிலும் ஏலத்தின் போக்கைச் சார்ந்தது. ஏனெனில் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதலில் அஸ்வின் உயர் செயல் திறன் மையத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். மையத்தின் கிரிக்கெட்டுக்கு உரித்தான நடவடிக்கைகளை அவர் கவனித்துக் கொள்வார்.

அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இப்போது அஸ்வின் சிஎஸ்கே திட்டங்களில் இருக்கிறார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்காக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய முதல் டிவிஷன் லீகிலும் ஆடுவார். அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த போதே இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், அஸ்வினைப் பாராட்டிப் பேசி, ‘உங்களுக்கு ஒரு பெரிய ரோல் காத்திருக்கிறது’ என்று அப்போது கூறினார்.

இந்த புதிய ரோல் குறித்து அஸ்வின் பேசியபோது, “ஆட்டத்தை வளர்ப்பதும் கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்வதும் என் முதன்மையான கவனம்” என்றார்.

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகியவற்றுடன் அஸ்வின் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். அவரது ஐபிஎல் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களுக்குப் பிறகு அஸ்வின் 2016-ல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி போட்டியாளர்களான கெம்ப்ளாஸ்டில் சேர்ந்த நிலையில் தற்போது மீண்டும் சிஎஸ்கேவுடன் இணைந்துள்ளார் அஸ்வின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!