கள்ளச் சாராய உயிரிழப்பு வழக்கு: கைதானவர்களில் 9 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கைதான 17 பேரில் 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 221 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று இரவு வரை 5 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 58 பேர் உயிரிழந்தனர். இதில் 55 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நேற்று மாலை வரை உள் நோயாளிகளாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 111 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 12 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 29 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என 156 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

கள்ளச் சாராய வழக்கில், சாராய வியாபாரி கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உட்பட 17 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெத்தனாலை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்தததாக முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் சிவக்குமார், மாதேஷ் உள்ளிட்ட 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார், நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!