தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் குமரிக்கு வருகை. விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.
குமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்று பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலையை குடும்பத்தினருடன் பார்வையிட்டார்.
இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகைதந்தார். அங்கு அவரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி.அன்பு, டி.ஐ.ஜி.பிரவின்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர், மாலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து படகு சவாரி செய்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்குள்ள தியான மண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் சுமார் 15 நிமிடம் தியானம் செய்துவிட்டு, திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இரண்டாவது நாள் பயணமாக நேற்று விவேகானந்த கேந்திர வளாகம் சென்று சூரிய உதயத்தை கண்டு ரசித்தார். பின்னர் விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டவர் அங்கிருந்து ராமாயண தரிசன கூடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஆளுநர் வருகையை ஒட்டி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரை 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.