தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பிறந்த நாள் இன்று.
1966 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூரில் செந்தமிழன், அன்னம்மாளுக்கு மகனாக பிறந்தவர் சீமான். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் , பின்னாட்களில் பாஞ்சாலங்குறிச்சி, வீரநடை, தம்பி உள்ளிட்ட படங்களை இயக்கினார். திரைத்துறையில் இருக்கும்போதே விடுதலைப்புலிகளின் ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிறைய கூட்டங்களில் பேசியவர் சீமான். இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் சந்தித்தார் இவர், அதுவே அவரின் அரசியலுக்கு இயங்குசக்தியாகவும் உள்ளது.

2008 ஆம் ஆண்டு இலங்கை இனப்படுகொலைக்கு நீதிகேட்டு ராமேஸ்வரத்தில் நடந்த திரையுலகின் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது, இதற்காக இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி 2010 ஆம் ஆண்டில் அதனை நாம் தமிழர் கட்சியாக மாற்றினார்.
2016 ஆம் ஆண்டு கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் துருவங்கள் இருந்தபோதே முதன்முறையாக தனியாக சட்டமன்ற தேர்தலை சந்தித்து 1.1 சதவீத வாக்குகளையும் பெற்றது சீமானின் நாம் தமிழர் கட்சி. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3.87 சதவீத வாக்குகளை பெற்றது, இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை அளித்திருந்தார் சீமான்.
அதனைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்று சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்றது நாதக. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழரை நிலை நிறுத்தினார் சீமான்.

கட்சி தொடங்கிய காலம் முதலே கடுமையான விமர்சனங்கள், பிரச்சாரங்கள், கேலிகள் இருந்தாலும்கூட, தான் சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் தொடந்து வளர்ந்துகொண்டே வருகிறார்.வெறும் அரசியல் பேச்சுகளை மட்டுமே பேசாமல் மண், மரம், இயற்கை, பல்லுயிர்ச்சூழல் என தனது மேடைப்பேச்சுகளில் பேசும் தமிழக அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் சீமான், இதுவே இளைஞர்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பு பெருகவும் காரணம்.

தமிழ்த்தேசியம், திராவிட எதிர்ப்பு, தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும், முப்பாட்டன் முருகன், தைப்பூச விடுமுறை, ரஜினி அரசியல், விடுதலைப்புலிகள் ஆதரவு என தமிழகத்தில் “டிரெண்டிங் தலைப்புகளை” வழங்குவதில் சீமானுக்கு நிகர் சீமான் தான்.
நவம்பர் 8 பிறந்தாளான இன்று அரசியல் தலைவர்கள் தமிழ் இயக்கங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சமூக வலைதளங்களில் ‘தரணி ஆள வந்த தமிழ் மகன், தமிழ்த்தேசிய தலைமகன்,ஆளப்போறான் தமிழன்’எனவ புகழாரம் சூட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.