இன்று வ.உ.சி பிறந்த தினம் 05-09-2021
நம்மில் பலருக்கு வ.உ.சிதம்பரனார் சுதந்திர போராட்ட வீரராகவும், கப்பலோட்டிய தமிழனாகவும், நாட்டிற்காகவே தியாகம் செய்த பெருமகனராக தெரியும். ஆனால் அவரது இன்னொரு பக்கம், தமிழ் மீது தீரா ஆர்வம் கொண்ட தமிழ் அறிஞராகவே வாழ்ந்தார். தேசத்தை போலவே நம் தமிழ்மொழி மீது பற்று கொண்ட வ.உசி அவர்கள் தன் இலக்கிய ஆர்வத்தை பேச்சாகவும் எழுத்தாகவும் உணர்வுபூர்வமாக தமிழில் தந்துள்ளது மிகப்பெரிய மகிழ்வான உண்மை.
பிறமொழி நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தல், உரைநூல்கள், பதிப்புகள், மெய்ஞ்ஞான நூல்கள், சுயசரிதை என தன் படைப்புகளால் தனக்கென தனி இடம் தமிழ் இலக்கியத்தில் தனி இடம் பிடித்துள்ளார் வ.உ.சி. தன் இலக்கிய பயணத்தில் சுமார் 16 நூல்களை தந்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வ.உ.சி இளமை காலம் தொட்டே தமிழை விரும்பி கற்பவராக இருந்தார். தனது இளம் வயதிலிருந்து சுய ஒழுக்கம் சம்பந்தமான நூல்களையும், நீதி நூல்களையும் தன் முன்னோர்களிடம் கேட்டு விரும்பி கற்று வந்தார். அதுவே அவரது பிற்காலத்தில் அவரை மிகப்பெரிய தமிழ் இலக்கிய ஆளுமையாக மாற்றியது என்பது உண்மை. தொடக்கத்தில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவராய் திகழ்ந்த அவர், ஆன்மீகப்பேச்சுக்களையும், அதன் மூலம் தனி மனித ஒழுக்கத்தையும் தன் எழுத்துக்களில் மலர வைத்தார். ஒவ்வொரு தனி மனிதன் சரியாக நடந்து கொண்டால், அவன் இருக்கும் அந்த சமூகமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை தன் எழுத்துக்களில் காண்பித்தார்.
விவேகபாநு என்ற பத்திரிக்கையில் தான் வ.உ.சி எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் வெளிவந்தன.வ.உ.சி அவர்களின் ”கடவுள் ஒருவரே”, ”உலகமும் கடவுளும்” என்ற கட்டுரைகள் வ.உ.சியின் பெயர் சொல்லும் கட்டுரைகள். திலகர், நேரு அவர்கள் விடுதலை தாகத்தில் சிறைபட்ட சமயத்தில் எழுதிய நூல்களைப்போலவே இவரும் தான் சிறைபட்ட சமயத்தில் எழுதிய நூல் ”மெய்யறிவு”.இந்நூலின் பாக்களை சிறையிலிருந்து கைதிகளுக்கு எளிய நடையில் போதித்தார்.மேலும் தனது மனம் கவர்ந்த நூலான திருக்குறளின் நீதியை மையமாகக்கொண்டு ’மெய்யறம்’ என்ற நூலினை எழுதி மனங்களின் நலன் காத்திட உதவினார்.
ஜேம்ஸ் ஆலனின் ’அவுட் ஃப்ரம் தி ஹார்ட்’ நூலினை ”அகமே புறம்” என்று மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்டார். மேலும் அந்நேரத்தில் இந்நூலுக்கு பாரதி மதிப்புரை தந்து இந்நூலின் தமிழ் மணத்தை நம் நாடெங்கும் பரவச்செய்தார்.மேலும் இவரது மொழிப்பெயர்ப்பு நூல்களான வலிமைக்கு மார்க்கம், மனம் போல் வாழ்வு, போன்றவை அந்நேரத்தில் அதிகம் பேசப்பட்ட நூல்கள் ஆகும்.
இன்னிலைக்கு விருத்தி உரை எழுதிய வ.உ.சி அவர்கள், தன் வாழ்க்கையின் கடைசி கட்டம் வரை சிவஞான போதத்திற்கான சூத்திரங்களும் உரையுமே ஆகும்.சிவஞான போதத்திற்காக நாள் ஒன்றில் இரண்டு மணி நேரம் செலவிட்டு எல்லோரும் எளிதாக நேர்த்தியாக புரியும் வகையில் உரையை எழுதி மகிழ்ந்தார். மேலும் தன் வாழ்நாளில் சுமார் 380பாடல்கள் எழுதியும் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் வ.உ.சி. இப்பாடல்கல் கடவுள், ஒழுக்கம், அன்பு, உறவுகள்,நட்பு, முதலியவற்றை மக்களுக்கு போதிக்கும் விதமாக அமையப்பெற்றவை ஆகும்.
”தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை” என்ற வரிகள் இன்று வ.உ.சி அவர்களுக்கும் பொருந்திவிட்டன என்பதே உண்மை. திருக்குறள் மணக்குடவர் உரையும், தொல்காப்பியத்தின் இளம்பூரணம் உரையையும் பதிப்பித்து மகிழ்ந்தது அவரது சீரிய தமிழ் இலக்கியத்தொண்டே. விடுதலை போராளி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்பட்ட வ.வ.சி இன்னொரு முகமான தமிழறிஞர் முகத்தையும் போற்றுவோம். அவர் தமிழ் உலகிற்கு வழங்கிய நூல்களை கற்று மகிழ்வோம். அவர் வழி நடப்போம்.
நன்றி:
நெருப்பு விழிகள் ம.சக்திவேலாயுதம்.