ஆபத்தின் விளிம்பில் உலக அமைதி!!
ஐ.நா விரைந்து செயலாற்றுமா?
நேற்றைய தினம் தலிபான்களிடம் காபூல் வீழ்ந்தவுடனேயே ஆப்கான் முழுமைக்கும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இது போன்ற மிகப்பெரிய ஆபத்து நிகழும் என்பதை நான் கடந்த ஜூலை 17 ஆம் தேதியே எனது 10 பக்க கட்டுரையில் எழுதி இருக்கின்றேன். ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முழுமையாக ஆப்கானிலிருந்து விலக்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் தலிபான்கள் சிறிதும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் யாருக்கும் சிறிதும் கூட இரக்கம் காட்டவில்லை. காபூல், கந்தகார் போன்ற பகுதிகளில் குடிகொண்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் தூதரக அதிகாரிகளைக் கூட காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வர முடியாத பரிதாப நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு, புதிய எழுச்சியோடு காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்தது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மட்டுமல்ல; அமைதியையும், சமாதானத்தையும் விரும்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் தலைகுனிவே!
கடந்த 20 வருடமாகப் பல்லாயிரம் கோடி ரூபாயை ஆப்கானிஸ்தானுக்கு செலவு செய்ததாக அமெரிக்கா கூறிக்கொண்டாலும் வரலாறு மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தை மிகவும் பழமைவாய்ந்த அமைப்புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி மிக முக்கியமான தருணத்தில் கைவிட்டுச் சென்றது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் எதிர்காலத்தில் தலைகுனிவையும், அவமானத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
எவ்வளவோ நாடுகளில் புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் புரட்சிகள் மூலமாக அந்நாட்டு மக்கள் ஏதாவது ஒரு வகையில் விடுதலை பெற்று இருப்பார்கள்; அடையாளங்களை மீட்டெடுத்து இருப்பார்கள். ஆனால், தலிபான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிக மிகப் பழமைவாத, ஜனநாயக நெறிமுறைகளுக்கு சிறிதும் பொருந்தாத, மனிதநேயத்திற்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள். அவர்களிடத்தில் ஆட்சி-அதிகாரம் செல்வது என்பது ஆப்கானிஸ்தான் தேசத்திற்கு மட்டுமல்ல, அதேபோன்ற பழமைவாத, பிற்போக்கு கருத்துகளைக் கொண்ட சக்திகளும் பிற பகுதிகளில் எளிதில் தலைதூக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் வழி வகுக்கும்.
கடந்த 50 ஆண்டு காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளையும் அதில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் எதிர்கொண்டதையும் நாம் பார்த்திருக்கிறோம். அண்டை நாடான இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பூர்வீக தமிழர்கள் தங்களுடைய மொழியும், இனமும், பண்பாடும், கலாச்சாரமும் அளிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தங்களுடைய வாழ்வுரிமை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது என்று மட்டுமே போராடினார்கள். ஆனால், அவர்களை உலகின் எந்த தேசமும் அங்கீகரிக்க முன் வரவில்லை. ஆனால், பெரும்பாலான நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு தலைபட்சமாக விடுதலைப் புலிகளை மட்டுமல்லாமல் சாதாரண அப்பாவி மக்களையும் லட்சக் கணக்கில் கொன்று குவித்தார்கள். ஆனால் இன்று அப்பட்டமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள்; ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தலிபான்களுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படும் என அனைவரும் தாக்கப்படுவது; சாதாரண மக்களைக் கடத்திச் செல்வது, பிணைக்கைதிகளாக வைத்துக்கொள்வது; தற்கொலைப் படைகளை கொண்டு தாக்குதல் நடத்துவது மற்றும் அதிதீவிர பயங்கரவாத நடவடிக்கைகள்; வாகனங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகித் துயருற்று வருகிறார்கள். இதில் மட்டும் ஏன் உலகம் இவ்வளவு மௌனம் காக்கிறது என்பது புதிராகவே உள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் முக்கியமான கேந்திரத்தில் அமைந்து உள்ளதால் ஆப்கானில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஐரோப்பியா, ஆசியா மற்றும் பல நாடுகளுக்கு எதிர்விளைவுகளையும், அதிர்வலைகளையும் உண்டாக்கும். 2001க்கு பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, நேட்டோ நாடுகளும்; இந்தியா உட்பட பல நாடுகளும் செய்த வளர்ச்சிப் பணிகளும், இந்தியா கட்டிக் கொடுத்த நல்லெண்ண அணையும் அழிக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வருகின்றன. அங்கு தலிபான்களின் ஆட்சி-அதிகாரம் வலுப்பெற்று விட்டால் அவர்களுடைய இந்தியாவுடனான உறவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் நன்கு உணர்ந்து பார்க்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அண்டை நாடான பாகிஸ்தானும், சீனாவும் அவர்களுக்கு நெருக்கம் காட்டலாம். அதன் விளைவாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் நீட்சியாகக் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாறலாம். ஆனால் இந்தியா ஒருபோதும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என நான் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறேன். அதையே இப்போது மீண்டும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
ஐரோப்பிய நாடுகளின் தாராள ஜனநாயக நடவடிக்கை காரணமாக துனிசியா, சிரியா, ஈராக், லிபியா, ஈரான், எகிப்து, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போது அந்நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்கள் அந்நாடுகளில் ஏற்படுத்தும் பிரச்சினைகளை அந்நாட்டவர்கள் இப்போது உணர்ந்து வருகிறார்கள். தற்போது ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றுவதால் ஏற்படும் முக்கியமான ஆபத்துக்கள். 1. தலிபான்களின் சட்ட ஒழுங்கிற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பலர் அண்டை நாடுகளில் தஞ்சம் கேட்டு வரும் சூழல் ஏற்படும். 2. 20 ஆண்டுக் காலத்திற்கு பிறகான தலிபான்களின் எழுச்சி உலக அளவில் ஆங்காங்கே முளைத்தும், முளையாமலும் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும். 3. தலிபான்கள் தங்களுடைய எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் எந்த பகுதியிலும் நேரடியாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2019ஆம் ஆண்டு உருவாகிக் கடந்த ஒன்றரை வருடமாக உலகை ஆட்டிப்படைக்கும் கரோனாவை காட்டிலும் ஆப்கான் தலிபான் வசம் சென்றது உலக தரப்பு மக்கள் மத்தியில் ஒரு மனோ கிலேசத்தை உருவாக்கி இருக்கிறது; ஆபத்தின் விளிம்பில் உலக அமைதியும் சிக்கியுள்ளது.
அமெரிக்கா தனது 250 ஆண்டுக் கால வரலாற்றில் ஆசிய, ஐரோப்பியப் பிரச்சனைகளில் எவ்வளவோ அரசியல், இராணுவ பிழைகளைச் செய்திருக்கிறது. இப்போது தலிபான்களிடம் ஆப்கானை ஒப்படைத்துச் சென்றது பிழையிலும் பிழையாகும். ஏகாதிபத்தியங்கள் ஏழை-எளிய ஏமாளிகளாக இருந்தால் ஏறி மிதிப்பார்கள்; எதிர்த்துப் போராடினால் தலை தெறிக்க ஓடுவார்கள் என்பதற்கு இதுவே அத்தாட்சி.
அமெரிக்கா, உலக போலீஸ்காரராக தன்னை அடையாளப்படுத்தவும்; ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தங்களுடைய தலையாய கடமை என உலகிற்கு வெளிக்காட்டவும் துடியாய் துடிக்கும் தேசம். ஆனால் ஜனநாயகத்தின் கூறுகளைக் கோடியில் ஒரு பங்கு கூடக் கொண்டிராத தலிபான்களிடம் நடத்திய இரகசிய பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன? பல நாடுகளும் சேர்ந்து பயிற்சி அளித்து உருவாக்கிய ஆப்கான் ராணுவத்திற்கு இன்னும் கொஞ்சக் காலத்திற்கு வான்வெளி ஆதரவு மற்றும் மனோரீதியான ஆதரவு தராமல் பாதியில் விட்டுச் சென்றது ஏன்? 2020 கர்த்தார் நகரில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு மாறாக வன்முறை மூலமாக ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்களே? இதற்கெல்லாம் அமெரிக்கா வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும்.
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியது ஒரு நாட்டு எல்லைக்குள் முடியும் பிரச்சனை அல்ல. அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசிய குண்டுகளை காட்டிலும் பாதிப்பைத் தரும் விஷயமாகும். எனவே ஆப்கானின் அமைதி நிலை நாட்டப்பட வேண்டும். தலிபான்கள் நிராயுதபாணிகளாகப்பட வேண்டும். அனைத்து நாடுகளும் இணைந்து வலுவான அமைதிப் படை ஒன்றை ஆப்கானில் நிலைநிறுத்தப் படுவதற்கான வாய்ப்பு குறித்து ஐ. நா பொதுச் சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உடனடியாக கூட்ட வேண்டும். இந்த அசாதாரண சூழலில் இந்திய நாடும், நாட்டு மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தெரித்துள்ளார்.