
கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தைத் திருவிழா, ஆனி மாத திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகளின் போது முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ
வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மலக்கோட்டை கிராமத்த்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் ஆனி மாத திருவிழாவில் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு என தக்கார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து கடந்த வருடம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் வழக்கு தொடர்ந்து அவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோயிலில் உள்ளே அனுமதி வழங்கப்படுவது இல்லை.
எனவே, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கு தலைப்பாகை அணியவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது எனவும், அட்டவணைப்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும், என மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாகி நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.