நடிகர் விஜய்க்கு தந்த ஆதரவு வாபஸ்… தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் பகிரங்க அறிவிப்பு… ஏன் தெரியுமா?

நடிகர் விஜய்க்கு தந்த ஆதரவு வாபஸ்… தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம்… ஏன் தெரியுமா?

நடிகர் விஜய்க்கு அளித்த ஆதரவை ஒரு வாரத்திற்குள் வாபஸ் பெற்றிருக்கிறது மது அருந்துவோர் விழிப்புணர்வு சங்கம்.ஏன் நடந்தது இந்த மாற்றம்? எதற்காக ஆதரவு தரப்பட்டது? எதற்காக விலக்கிக் கொள்ளப்பட்டது?

அது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனிடம் கேட்ட போது, அவர் அளித்த பதில்கள் இதோ:”விஜய் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்தார். அவர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் அவருடைய சமூக பொறுப்பைப் பார்த்து, அவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தான் எங்கள் சங்கம் அவருக்கு முழுமையான ஆதரவு கொடுத்தது. நேற்று அவரது பிறந்த நாளில் கூட சாலை விபத்தை தடுக்கும் விதமாக அவரது ரசிகர்கள் சார்பில் ஹெல்மெட் வழங்கப்பட்டது. இதெல்லாம் உண்மையில் சமூகப்பணிகள் தான்.

இதையெல்லாம் பார்த்து தான் திராவிட கட்சிகளின் அரசியலுக்கு விஜய் மாற்றாக வருவர் என்பதற்காக அவருக்கு ஆதரவு கொடுத்தோம். ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’என்று ஒரு காலத்தில் பாடி அரசியலுக்கு வந்தவர் கமல், வெத்தலைய போட்டேண்டி கிக்கு கொஞ்சம் ஏறுதடினு’ பாடி அரசியலுக்கு வர முயற்சி செய்தவர் தான் ரஜினி. அவர்கள் அன்று இப்படி பாடியதால் தான் அதன் தாக்கம், இன்று 60 சதவீதம் பேர் மது ப்ரியர்களாக மாற காரணம். அதே பாணியில், விஜய் இருப்பார் என நினைக்கவில்லை. லியோ படத்தின் முதல் பாடல் வெளியான போது, அதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ‘அண்டா நிறைய பீர் கொடுங்க’ என்கிறார். ‘மில்லி போட்டா கில்லி வெளியே வரும்’ என்கிறார்.

இவர் வந்து கட்டுப்படுத்துவார் என்று பார்த்தால், இவரும் ரஜினி, கமல் மாதிரி தான் இருக்கிறார். இதுக்கு மேல் தமிழ்நாடு தாங்காது. இப்போது இருப்பதை வரை போதும், இதுக்கு மேல இன்னும் மக்களை குடிக்க வைக்க எந்த தூண்டலும் வேண்டாம். அதனால் தான் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஆதரவை உடனடியா வாபஸ் பெறுகிறோம். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் அவருக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததற்கு தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,”என்று செல்லப்பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!