கீழடி கொந்தகையில் கிடைத்த சுடுமண் குடுவை
கொரோனா ஊரடங்கு, மழைப் பொழிவு தொய்வுகளுக்கும் இடையில் அகழாய்வு வேகமெடுத்து வருகின்றன. 6-ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை 4 இடங்களையும் சேர்த்து 130 குழிகளுக்கு மேல் தோண்டப்பட்டு அகழாய்வு தொடர்கிறது.
செப்டம்பர் இறுதிவரை அகழாய்வுப் பணி நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கீழடி அகழாய்வில் கொந்தகைதான் பழைமையான ஈமக்காட்டுப் பகுதியாகும்.
இதனால், கொந்தகை பகுதி சிறப்பு மிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கீழடியில் மக்கள் வாழ்ந்ததற்கான இடம், தொழிற்சாலை, செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டதன் தொடர்சியாக அவர்களின் கடைசி காலத்துக்குப் பின் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறியும் பணியாகத்தான் கொந்தகையில் அகழாய்வு செய்யப்படுகிறது.
கொந்தகை – கீழடி தொல்லியில் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம் கூறுகையில் இங்கு கிடைக்கும் முதுமக்கள் தாழி மற்றும் எலும்பு மாதிரிகளை வைத்து கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களின் வாழ்வியல் முறை பண்பாடு, கலாசார முறை காலகட்டங்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்த தகவல்களை வெளிக்கொணர முடியும் எனத் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறிய அளவு எலும்புக்கூடுகள் முதல் பெரிய அளவு எலும்புக்கூடு எனச் சுமார் 6 எலும்புக் கூடுகள் தற்போதுவரை கிடைத்துள்ளன. கொந்தகையில் 29 குழிகள் தோண்டப்பட்டு, 27 முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன.
தோண்டத்தோண்ட தாழிகள்… ஆச்சர்யம் தரும் கீழடி அகழாய்வு!
மொத்தம் 15 எலும்புக் கூடுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழக அகழாய்வில் எலும்புகள் மரபணு சோதனை செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்பதும் சிறப்பு மிக்கது. இந்நிலையில், கொந்தகையில் பழங்கால மனிதன் பயன்படுத்திய குடுவை ஒன்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து கீழடி தொல்லியல் அகழாய்வு இயக்குநர் சிவானந்தம் கூறுகையில்,`கீழடி அகழாய்வு தொடர்ச்சியான கொந்தகையில் தற்போது சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் குடுவை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண் குடுவையை ஆவணப்படுத்தும் பணியில் உள்ளோம். இந்தக் குடுவை தண்ணீர் குடிக்க, சமையல் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பயன்களுக்குத் தேவைப்பட்டிருக்கலாம்” என்றார்.